Wednesday, January 15, 2014

ஆண் என்றால் என்ன

பல்லவி

ஆண் என்றால் என்ன
பெண் என்றால் என்ன
தொழிலொன்று கிடைக்கும் வரை
தயக்கங்கள் தீராது

படிப்பு உண்டு கையிலே
துணிவு உண்டு நெஞ்சிலே
பார் போற்ற போராடு
பசி தாகம் பாராது

சரணம் 1

பணமிருந்தால் பையினிலே
பயமில்லை வாழ்க்கையிலே
குணம் மட்டும் இருந்தாலோ
அது என்றும் குப்பையிலே

சொந்தக் காலில் நிற்பதற்கு
சொந்தங்கள் தேவையில்லை
முயற்சியினால் முன்னேறு
தூண்டுகோல் வேறு இல்லை

சரணம் 2

நல்ல காலம் வருமென்றால்
தானாக வந்திடாது
நம்பிக்கை விதை போட்டு
வாழ வேண்டும் துணிவோடு

உனை நம்பும் சொந்தங்கள்
உலகினிலே சிறப்பாக
தோள் நிமிர்ந்து வாழ்வதற்கு
தொழில் பெற்று முன்னேறு!

விருப்பங்கள் இல்லையெனில்

பல்லவி

விருப்பங்கள் இல்லையெனில்
விதி வென்று விடுமா?
விரும்பிய வாழ்க்கையினை
அது கொன்று விடுமா?

சரணம் 1

ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஆரம்பம் திருமண ஊற்று
வாழும் காலம் முடியும் வரை
வருடணும் வசந்த காற்று

உயிர் இரண்டும் இணையனும்
உண்மை அன்பை ஏற்று
மனதுக்குள் வளரணும்
நம்பிக்கை எனும் நாற்று

சரணம் 2

நடப்பதென்ன நாளுமிங்கே
நடைபழக்கும் விளையாட்டு
இஷ்டம்தான் இல்லையென்றாலும்
கஷ்டம் தருகிற கூத்து

காதலினை மறக்கச் சொல்லும்
காதல் புரிந்தவர் கூற்று
ஆதலினால் மாறிவிட்டேன்
அன்னை தெரேசாவை ஏற்று!!

எரிமலையின் கொடுமைகளை

பல்லவி

எரிமலையின் கொடுமைகளை
என் இதயம் தாங்கிடுமா?
புயல்காற்றின் தாலாட்டில்
என் மனது தூங்கிடுமா?

சரணம் 1

காணாத கனவுகள்
கண் முன்னே நிழலாக
விரும்பாத வாழ்வொன்றை
விதி தந்ததே நிஜமாக

எழுதாத கவிதைகள்
ஏட்டினிலே வரியாக
பாடாத பாடல்கள்
காற்றினிலே மொழியாக

சரணம் 2

இதயம் பற்றி எரிகிறதே
இயலாமைகள் வதைக்கிறதே
கலகங்கள் எனக்குள்ளே
கல்லறைகள் அமைக்கிறதே

பாழான தலையெழுத்து
வாழ்க்கை தனை கவிழ்க்கிறதே
வாளாகி என் மனசை
வதைத்து தினம் துலைக்கிறதே

பாதைகள் புதிது

பல்லவி

பாதைகள் புதிது
பயணங்கள் புதிது
பணக்காரப் பயலுக்கு
பசி கூட புதிது

வறுமைகள் கொடிது
வடிவங்கள் கொடிது
வறியவருக்கெல்லாம்
வயிறும்தான் கொடிது

சரணம்

இறைவனின் சந்நிதானத்தில்
இழிபுள்ளியா இந்த ஜீவன்கள்
எங்கே போய் அழிப்பது
ஏழைகள் என்ற நாமங்கள்

வீதி தனையே வீடு செய்து
வியக்க வைக்கும் கோலங்கள்
கடினப்பட்ட வாழ்க்கையினை
கடனாய் கொடுத்த காலங்கள்

(பாதைகள் புதிது)




(பாடலுக்கான சூழ்நிலை – வீதியோரங்களில் வாழும் ஏழைகளுக்காக எழுதப்பட்டது)

வானவில்லின் நிறங்கள்

பல்லவி

வானவில்லின் நிறங்கள் என்ன
கறுப்பா?
காணவில்லை என் மேல் இன்னும்;
வெறுப்பா?

சரணம் 1

காதல் என்ற நோய் எந்தன்
கண்ணை மறைத்துக் கொண்டது
பாசம் நேசம் யாவையும்
பாதி வழியில் கொன்றது

பாடம் படிக்கும் போதினிலும்
பயித்தியங்கள் பிடித்தது
ஓடம் போல உள்ளமும்
ஓய்வில்லாமல் துடித்தது

இது காலம் தந்த காயமா
எல்லாம் இங்கே மாயமா

(வானவில்லின்)

சரணம் 2

கணவன் கொடுமை என்றேதும்
கலவரங்கள் இல்லைத்தான்
ஆன போதும் தாய் வதனம்
அகலவில்லை இன்னும்தான்

எந்தன் வயிற்றில் பூத்த மலர்
ஏதும் செய்தி அறிகையில்
உள்ளதை எப்படி மறைப்பேனோ
உண்மையை எப்படி உரைப்பேனோ

இது காலம் தந்த காயமா
எல்லாம் இங்கே மாயமா

(வானவில்லின்)


(பாடலுக்கான சூழ்நிலை – வீட்டைவிட்டு தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண் சில வருடங்கள் கழித்து தான் செய்த தவறை எண்ணியழும்போது)

வானம் உடைந்து



வானம் உடைந்து

பல்லவி

வானம் உடைந்து
மண்ணில் வீழக் கூடுமோ?
கானம் பாடும்
குயிலின் குரல்தான் மாறுமோ?

சரணம் 1

காதல் செய்த காலங்கள்
கண்ணில் மீண்டும் தோன்றுதே
இனிமேல் அவைகள் வருமாவென
இதயம் இங்கே வாடுதே

வாழ்ந்த இன்ப வருடங்களில்
வாழ்க்கை சுவையாய் இருந்ததே
எதிரே உள்ள எதிர்காலம்
என்னை பயங்கள் காட்டுதே

(வானம் உடைந்து)

சரணம் 2

இரண்டு மலர்களைத் தந்துவிட்டு
இறைவன் உன்னை அழைத்தானோ
இனிமேல் உன்னை எண்ணியழ
இவளின் விதியைப் படைத்தானோ?

அயலார், வீட்டார், சொந்தங்கள்
அகிலம் எனக்காய் இருந்தாலும்
உந்தன் இடம்தான் நிறைந்திடுமா
உயிரின் பூமுகம் மறைந்திடுமா?

(வானம் உடைந்து)


(பாடலுக்கான சூழ்நிலை – திருமணம் செய்து
ஐந்தே வருடங்களுக்குள் நோயின் காரணமாக
கணவன் இறந்து விடுகின்றான். கணவனை இழந்த மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அல்லல்படும்போது அவளது வேதனையின் வெளிப்பாடு)

உயிர் கொண்ட பெண்மைக்கு

பல்லவி

உயிர் கொண்ட பெண்மைக்கு
உயர்வான பதவி தந்தாய்
துயர் போக்கும் அருமருந்தாய்
துணையாய் என்னருகில் நின்றாய் (2)

சரணம் 1

இந்த பூமி இதமாக
இத்தனை நாள் இருந்ததடா
எந்த ஜீவன் இனி எனக்கு
உறுதுணையாய் இருக்குமடா

திருமணத்துக்காய் பூத்திருக்கும்
என்னுடைய பெண் பூவே
திலகமிட்டு சுமங்கலியாய்
திறமையுடன் வாழ் மகளே

(உயிர் கொண்ட)

சரணம் 2

ஈரைந்து மாதங்கள்
சென்றதும் நீ அறிவாய்
தாய் என்ற சொல்லுக்கு
பெருமை தனை நீ உணர்வாய்

கொண்டவனின் மனமறிந்து
கோலமிடு பைங்கிளியே
உன் தாயினி நானில்லை
உன் அத்தை உணர் நிலவே

(உயிர் கொண்ட)


(பாடலுக்கான சூழ்நிலை – தனது ஒரே மகள் திருமணம் முடித்து போகையில் ஒரு தாயின் எண்ணம்)

மாங்குருவி

பல்லவி

மாங்குருவி போல் வந்து
மார்பில் கூடு செய்தவளே
பூ அருவி சலசலப்பாய்
பூங்காற்றை தந்தவளே

விண்மீனை திருடிக்கொண்டு
விண்ணிடமே மறைத்தவனே
பெண் பூவை திருடிடவே
சம்மதங்கள் கேட்டவனே

சரணம் 1

காதோரம் உன் சிணுங்கள்
கவிதைகள் பலதை படித்துத் தரும்
அந்நேரம் என் இதயம்
ஆயிரம் தடைவை துடித்து விடும்

கண் ரெண்டில் ஓவியமாய்
கண்ணா உந்தன் சிரிப்பிருக்கு
மண் மீது நான் பிறந்தேன்
அதிலும் ஏதோ சிறப்பிருக்கு

            (மாங்குருவி)

சரணம் 1

விழி ரெண்டில் உனை இருத்த
விழிகள் உன்னை படம் பிடிக்கும்
எந்நாளும் உனைக் காண
என்னிடம் மனது அடம் பிடிக்கும்

தப்பேதும் நீ செய்தால்
தண்டனை என்ன தந்திடனும்?
இதழ் கொண்டு முத்தமிடு
இன்பங்கள் அதனால் பொங்கிடனும்

            (மாங்குருவி)


(பாடலுக்கான சூழ்நிலை – தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்போது)

தொழில்நுட்ப யுகத்தினிலே



பல்லவி

தொழில்நுட்ப யுகத்தினிலே
தொழில் தேடும் போதினிலே
எதிர்காலம் உனக்காக காத்திடுமா?

கற்கின்ற பருவத்திலே
கற்காமல் நீ இருந்தால்
வருங்காலம் கனிவாக பார்த்திடுமா?


சரணம் 1

உலகில் வாழ்வது மிக கஷ்டம்
உணராவிட்டால் பெரும் நஷ்டம்
உதயம் காண கல்விதனை
கற்க புறப்படுவாய்!...

வாழ்க்கை என்பது பாதி வனம்
வாழாவிட்டால் பாலைவனம்
வாழ்ந்து காட்டி பின்நாளில்
உலகத்தை வென்றிடுவாய்!

எதிர்காலம் இனிய கீதம் பாடும்
எழில் கொண்ட வாழ்வு வந்து சேரும்!


சரணம் 2

காதல் வைரஸ் வரும் பருவம்
கவிதை எழுதும் ஞானம் வரும்
தோழா கொஞ்சம் நீ அசந்தால்
தோல்வி தேடி வரும்!

அனைத்தும் பயில மனமிருந்தால்
அகிலம் உனக்கு ஏணி தரும்
அறிவால் வெல்லும் பலமிருந்தால்
அரிவாள் நாணி விடும்!

எதிர்காலம் இனிய கீதம் பாடும்
எழில் கொண்ட வாழ்வு வந்து சேரும்!

(பாடலுக்கான சூழ்நிலை – மாணவர்களுக்கான அறிவுரை)

பொன்மாலைப் பொழுதொன்றில்

பல்லவி

ஆண் -  

    பொன்மாலைப் பொழுதொன்றில்
    பொற வந்து நின்னது போல்
    ஏ புள்ள ஓ வதனம்
    என் நெஞ்சில் பதிஞ்சிடுச்சி...

பெண் -  
 
    கண்ஜாட கவி கொண்டு
    கட்டி என்ன போட்டுபுட்ட
    ஏ இதயம் புறாக்குஞ்சாய்
    ஓ கண்ணில் அடஞ்சிடுச்சி!

(பொன்மாலை)


சரணம் 1

ஆண்  

    பாசம் வச்ச நெஞ்சுக்குழி
    ஒன் நெனப்பால் நெறஞ்சிடுச்சி
    குளிர்கால எண்ணெய் போல்
    ஏ உள்ளம் ஒறஞ்சிடுச்சி!

பெண்  

    பனியான ஓ சிரிப்பில்
    பாதி மனம் கரஞ்சிடுச்சி
    ஓ பார்வை பட்டதுமே
    ஏ உசிரு சிலிர்த்திடுச்சி

(பொன்மாலை)


சரணம் 2

ஆண்

    அடியே நீ கொன்னுபுட்ட
    தீ விழியால் தின்னுபுட்ட
    மடிமீது தல வச்சால்
    மயங்காம தள்ளிப்புட்ட

பெண்

    ஏதேதோ செய்துபுட்ட
    என்னழகை கொய்துபுட்ட
    மார்கழியில் மாலை தந்து
    மதிமயங்கச் செய்துபுட்ட

(பொன்மாலை)


(பாடலுக்கான சூழ்நிலை –  தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்போது)

ஓ மேகமே ஓ மேகமே

பல்லவி

ஓ மேகமே ஓ மேகமே
கார் கூந்தல் பெண்ணவளைக் கண்டாயா?
என் நெஞ்சமே என் நெஞ்சமே
பார்ப்பவளை உன்னவளாய்க் கொண்டாயா?


(ஓ மேகமே)


சரணம் 1

ஆண் -   

    பூவையின் மனதில் பூகம்பம் - அது
    பூவைக்கு நான் தந்த காயங்கள்

    பாவையின் கண்களின் கண்ணீரோ
    பாவி என் சொல் வடித்த சாயங்கள்

    என்னாச்சு ஏ வார்த்தை கொன்னாச்சு...
    ஏதாச்சு அவ நெஞ்சு புண்ணாச்சு..

    அறியாமல் செய்தது!

(ஓ மேகமே)


சரணம் 2

பெண் -   

   சொற்கள் மனசை துளையிட்டு
    எந்தன் உள்ளம் துண்டாச்சு..

    கற்கள் பட்ட வாழை போல்
    கவலை வலிகள் ரெண்டாச்சு..

    ஆணென்று உன் திமிரு சொன்னாச்சு..
    பெண் தானே என் வலிமை நின்னாச்சு..

    கண்ணீரும் கூடுது!

(ஓ மேகமே)


(பாடலுக்கான சூழ்நிலை – ஆண் தனது
காதலியை சந்தேகப்பட்டு கன்னாபின்னாவென்று திட்டுகிறான். பிறகு அவளில் பிழை இல்லை
என்று உணர்ந்த பின்பு இப்படிப் பாடுகின்றான்)