Monday, November 3, 2014

இந்த வாழ்க்கை

பல்லவி

இந்த வாழ்க்கை
இனி போதும் போதும் எனக்கு
இப்படியே இருந்தால்
இனிப்பேதும் இல்லை நமக்கு



சரணம் 1

உயிருக்குள் ஒழிந்திருப்பதை விட
உனக்குள் ஒழிந்திருக்க பிரியப் படுகிறேன்
மனசுக்குள் காதலிப்பதை விட - உன்
மார்புக்குள் புதைந்திருக்க ஆவல் கொள்கிறேன்

காலைகள் தோறும் மறக்காமல்
காதல் செய்தி அனுப்ப எரிச்சல் படுகிறேன்
காலை மாலை எப்போதும் உன்
கைகளுக்குள் சிக்கியிருக்க எண்ணிக்கொள்கிறேன்



சரணம் 2

எப்போதாவது சந்திக்கும் வாழ்க்கை
எப்போதுமே இனி வேண்டாம் என்கிறேன்
தப்பாது உன்னிடமிருந்து தினம்
காதல்பாடம் கற்க கனவு காண்கிறேன்

நட்போடு உறவாடி என்னுடன் பழகும்
நண்பனாக நீ இருக்கவே ஆசைகொள்கிறேன்
சிறு தப்பேதும் நான் செய்தால் கூட
சிரித்தபடி ரசிக்கும் உனக்கே என்னைத் தருகிறேன்

சவுகரியம் வருமென்றால்

பல்லவி

சவுகரியம் வருமென்றால்
சாதாரணமாய் வந்திடாதே
சந்தர்ப்பம் அமைத்துக்கொள்
சட்டென்று தளர்ந்நிடாதே



சரணம் 1

பலமான மரம்தானே
பலகையாய் மாறுகிறது
வளமான எதிர்காலம்
உன் முன்னே தான் போகிறது

குடிசையில் வாழ்ந்நதவன்தான்
மாளிகையை தேடுகிறான்
நம்பிக்கை உள்ளவன்தான்
துணிவோடு ஓடுகிறான்

தங்கத்த சுட்டாலும்
அந்த சிங்கத்த சுட்டாலும்
மதிப்பென்னும் குறையாதே



சரணம் 2

கவலையின் கைப்பிடித்து
முன்னோக்கி நடைபோடு
தோல்வியைத் தோளோடு
அணைத்தபடி விளையாடு

வெற்றியின் உச்சத்தை
வெறுங் கனவு காணாதே
வலிகளைக் காணாமல்
வளம் வந்து சேராதே

தங்கத்த சுட்டாலும்
அந்த சிங்கத்த சுட்டாலும்
மதிப்பென்னும் குறையாதே

மருந்தெல்லாம் இனிக்குதடி

பல்லவி

மருந்தெல்லாம் இனிக்குதடி
மாம்பழமோ கசக்குதடி
நேராக நடக்கையிலும்
நெஞ்செல்லாம் பதறுதடி

குளிரிலும் தினம் குளிக்கிறேன்டி
இருமுறை பல் துலக்குறேன்டி
மாருதமே உனைப் பார்க்க
மல்லிகையாய் இருக்கிறேன்டி



சரணம் 1

மாதுளங்காய் பல்லழகே
மயக்கிடும் உன் சொல் அழகே
நெஞ்சோடு; சாஞ்சிருடி
எழுதித் தரேன் இவ்வுலகை

பச்சத் தண்ணியப் போல்
என்னையே நீ பருகேன்
மச்சானே உனக்காக
மருதங்கிளி நானிருக்கேன்


சரணம் 2

வாசமான புகையிலையே
சரசமிடும் பூங்குயிலே
வெடக்கோழி; நான் வாரேன்
வேறெங்கும் நான் போகேன்

நல்லா தான் சொல்லுறடா
பேச்சாலே கொல்லுறேடா
இன்னும் நான் இருந்தாக்கா
இம்சைதான் பண்ணுவடா

இந்த தேசம் நம் தேசம்

பல்லவி

இந்த தேசம் நம் தேசம்
இலங்கை என்னும் புகழ் தேசம்

இந்த தேசம் நம் தேசம்
இலங்கை என்னும் புகழ் தேசம்



சரணம் 1

முப்பதாண்டு போர்க் காலம்
முடிவில் எதனைத் தந்தது
எதிர்கால கனவு கலைத்து
பெரிய சேதம் தந்தது

உயிர்களின் மதிப்பு இன்னதென
உணர்வோமே பேதமின்றி
தீக் குணங்கள் அழியட்டும்
இனி மிச்ச மீதமின்றி



சரணம் 2

குண்டுகள் வெடித்து சிதறியதில்
குற்றுயிர் எத்தனை மடிந்தது
சாதி மதம் பார்த்ததினால்
சாதனை என்ன நிகழ்ந்தது

ஒருதாய் வயிற்றுப் பிள்ளையென
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
உலகத்தை நம் உறவாக்கி
உயர்ச்சி பெற ஒன்றிணைவோம்

எப்போது என் வெறுமையை

பல்லவி

எப்போது என் வெறுமையை
தீர்க்கப் போகிறாய்..
ஏன் என் பொறுமையை
இன்னும் சோதிக்கிறாய்?



சரணம் 1

ஆண்

நான் பூக்களோடு
சிநேகமான செய்தி அறிவாயா?
உன் தோள்களோடு
சாய்ந்து வாழும் நாட்கள் தருவாயா?

என் பார்வையோடு
நீங்கிடாமல் நாளும் இருப்பாயா?
என் காதலோடு
கைகள் கோர்த்து கீதம் இசைப்பாயா?



சரணம் 2

பெண்;:

என் காதல் தாகம்
தீர்ந்து போகும் நாட்கள் வர வேண்டும்
என் பாதி பாகம்
நீயே ஆகும் வரங்கள் தர வேண்டும்

உன் கண்கள் தீட்டும்
ஓவியங்கள் உன் அன்பைக் கூறும்
நீ மாலை சூட்டும்
நாளில் தானே ஏக்கங்கள் தீரும்

தேன் ஊறும் உன் கன்னம்

பல்லவி

ஆண் 

 தேன் ஊறும் உன் கன்னம்
தென்பட்டால் என் உள்ளம்
களவாக உனைத் தேடும் மானே...

பெண்;:

 பொல்லாத உன் கைகள்
வில்லாக தினம் மாறி
அம்பாக எனைத் தாக்கும் ஆணே

இருவர்

நாணம் என்ற கோட்டையை நாம் உடைக்கலாமா?
குளத்துக்குள்ள எறங்கி தினம் மீன் புடிக்கலாமா?



சரணம் 1

ஆண்

உன் தேகக் குழலை எடுத்து
நானும் ஊதவா
அத்துவானக் காட்டுக்குள்ள
வேட்டையாடவா

பெண் 

பட்டப் பகல் நேரமிது
புத்தி இல்லையா
வெட்டவெளி இருக்குதையா
ரொம்பத்  தொல்லையா

ஆண்

என் புத்திக்குள்ள போதையத்தான்
ஏத்தி விடுறியே

பெண் 

என் வெட்கம் என்ற பாதையத்தான்
மாத்தி விடுறியே



சரணம் 2

ஆண் 

 சாமக்கோழி கூவும் போதும்
பிச்சுத் தின்னுறேன்
கரண்ட் அடிக்கும்; எடத்தயெல்லாம்
கணக்கு பண்ணுறேன்

பெண்

உன் பார்வை வந்து மோதும்போது
குழந்தை ஆகிறேன்
நீ போர்வை கொண்டு மூடும்போது
தொலைந்து போகிறேன்

ஆண்

குடிச்ச பின்னும் தாகம் இன்னும்
தீரவில்லையே

பெண்

தீரும் வரை குடிச்சிக்கலாம்
சோர்வு இல்லையே

பொல்லாத காதல் என்னை

பல்லவி

பொல்லாத காதல் என்னை
போர் செய்து கொல்லும்
நில்லாத காற்று எந்தன்
வாழ்க்கையைச் சொல்லும்

ஒரு கல் போலவே என் தலைமீதிலே
அது பாரங்கள் தந்து என்னை வதைக்கிறதே


சரணம் 1

பூமழை தூவும் ராத்திரி நேரம்
உன் முகம் தோன்றும் கண்ணில்
அது என்றும் அகலாதிருந்து
என்னை கீறிச் செல்லும்
நாளெல்லாம் நினைவில் வந்து
துயர் வாரிக் கொல்லும்

நீ தந்த காதல் எனக்கு
காயங்கள் கூட்டும்
என் கண்ணீர் தானே இனிமேல்
தாகங்கள் தீர்க்கும்


சரணம் 2

காரணம் இன்றி காதலை கொன்ற
கண்மணி நீயும் எங்கே
உனைத் தேடி நாட்கள் எல்லாம்
அலைந்தேனே இங்கே
பசி தாகம் பிணியைக் கூட
மறந்தேனே அன்பே

வெண்ணீரை ஊற்றும் வலிகள்
காட்டிட வேண்டாம்
கண்ணீரைப் பரிசாய் நீயும்
கேட்டிட வேண்டாம்

தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட

பல்லவி

தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட
காரணம் நீங்கள் தந்தையே..
மரண வலி நான் கொடுத்த போதும்
மகிழ்வுடன் பெற்றாயே என் தாயே!

இன்று நான் ஆகிவிட்டேன்
வாழ்க்கையைக் கற்ற பெண்ணாக
இனிமேல் நானிருப்பேன்
உங்களின் இரு கண்ணாக

ஆராரிரோ பாடினீர்கள்..
என் சந்தோசத்தை மட்டுமே நாடினீர்கள்



சரணம் 1

சிறு பிள்ளையாய் நானிருக்கையிலே
பெரும் மகிழ்வுடனே கொஞ்சினீர்கள்..
பருவ வயதடைந்ததும் என்வாழ்வு
திசைமாறாதிருக்க அஞ்சினீர்கள்

நல்ல நண்பர்கள் யாரென்பதை
அறிவுரையாகக் கூறினீர்கள்..
எதிர்காலம் சிறப்பாக அமைய
கல்வியை இதயத்தில் கீறினீர்கள்

தம்பிக்கும் தங்கைக்கும் இதையே
நம்பிக்கை விதையாக தூவினீர்கள்

சரணம் 1

கருவறை சுகந்தம் தரும் நிம்மதி
வாழ்க்கையில் இனிமேல் கிடைக்காது
என் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகளை
பார்ப்பேன் மனதை உடைக்காது

பறவையின் சிறகாக மாறி நானும்
தாய் தந்தையரை காப்பேனே
கடவுளிடம் கையேந்தியே நான்
கருணை காட்டும்படி கேட்பேனே

என் இறைவா என்றும் - என்
அன்னை தந்தைக்கு அருள்புரிவாய்!