Friday, October 31, 2014

உன்னைப் பார்க்க ஓடி வந்தேன்

பல்லவி

உன்னைப் பார்க்க ஓடி வந்தேன்
உயிரே என்று தேடி நின்றேன்
நீ போன பின் என்னை மறந்து
உருமாறி வாடி நின்றேன்



சரணம் 1

பெண்

வார்த்தையால் என் பாசத்தை
சொல்லத் தெரியவில்லை
இதுவரை உன்னைப் போல்
எவரும் கொல்லவில்லை

விழிகளில் அம்பு வைத்து
வீசியே வலிகள் தந்தாய்
வழியிலே எனைப் பார்த்தால்
பூக்களை பரிசாய் தந்தாய்



சரணம் 2

ஆண்

கண்களில் காந்தம் வைத்து
என்னை நீ திருடிக்கொண்டாய்
மென்விரல் கொண்டெந்தன்
கன்னங்கள் வருடிச் சென்றாய்

தென்றலின் ஈரம் போல
பேச்சாலே சுகங்கள் தந்தாய்
நாளைக்கு என்ன பேசலாமென
பாடங்கள் பயிலச் செய்தாய்

Wednesday, October 29, 2014

மார்புக்குள் ஒரு குடிசை செய்து

பல்லவி

மார்புக்குள் ஒரு குடிசை செய்து
மயிலே உன்னுடன் வாழ்கிறேன்
கண்ணுக்குள் ஒரு சோலை செய்து
கண்மணியே உன்னை ஆள்கிறேன்



சரணம் 1

ஆண்

காதல் வழியும் கண்களைக் கொண்டு
கவிஞனாய் என்னை ஆக்கிவிட்டாய்
கனவாய் இருந்த எந்தன் திசையில்
கலங்கரை விளக்காய் ஆகிவிட்டாய்

பூமொழி கொண்டு வார்த்தைகள் செய்து
பூவே என்னிடம் பேசி விட்டாய்
எங்கோ அலைந்து தவித்திருந்த எனக்கு
நேச வலையினை வீசி விட்டாய்


சரணம் 2

பெண்

எந்தன் பார்வையில் உந்தன் பூமுகம்
என்றும் படிந்திட ஆசையடா
என்னைத் தாண்டி நீ செல்கையிலே
எனக்குள் காதலின் ஓசையடா

என் விழியோரம் பெருகும் நீர்த்துளி
உன்னை எண்ணியே விழுகிறது
நீயும் நானும் ஒன்றாய்ச் சேர
இருதயம் பலமுறை தொழுகிறது!

நிம்மதியான இந்த நிமிடங்களை

பல்லவி

நிம்மதியான இந்த நிமிடங்களை
நித்தமும் எனக்குத் தருவாயா?
நிலவொளி வீச என் வானில்
நிஜமாய் தினமும் வருவாயா?



சரணம் 1

பெண்

ஆண் புயலாக அருகில் வருகிறாய்
தேன் துளிபோல சிரிக்கிறாய்
பாடலைப் போல மனதில் பதிகிறாய்
ராகங்கள் எனக்குள் இசைக்கிறாய்

நட்சத்திரமாய் இரவினில் வந்து
நித்திரை எல்லாம் திருடுகிறாய்
நாளிகை முழுதும் என்னுடனிருந்து
தென்றல் காற்றாய் வருடுகிறாய்




சரணம் 2

ஆண்

இப்படி நானே இருந்ததே இல்லை
இயல்பை எல்லாம் மாற்றினாய்
எப்படி நுழைந்து உள்ளத்துக்குள்
இன்பத் தேனை ஊற்றினாய்?

நெடுநாள் தொடர்ந்த கவலை எல்லாம்
நெருப்பாய் மாற்றி அணைத்தாயே
எனக்கென பூத்த அன்புச் செடியே
என்னை உனக்கள் இணைத்தாயே

அன்பை எல்லாம்

பல்லவி

அன்பை எல்லாம்
மறைத்து வைத்தாய் மொத்தமாக
நேற்று அதை
உரத்துச் சொன்னாய் முத்தமாக!


சரணம் 1

பெண்

நீ என்னைக் காதலிக்கிறாய்
நான் உனக்காய் காத்திருக்கிறேன்
நீ என்னைக் காண வருகையில்
நான் புதிதாய் பூத்திருக்கிறேன்

உறக்கம் தின்ற என் தலைவா
உனக்குள்ளே நான் இருந்திடவா?
எல்லா நிமிடமும் கரைகிறதே
எனக்குள்ளே நீ இருந்திட வா!



சரணம் 2

ஆண்

நீ என்னை வாசிக்கிறாய்
நான் உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னைக் களவாடினாய்
நான் உனக்குள் மொழியாகினேன்

உன் தோளில் தலை சாய்கிறேன்
காதல் காய்ச்சலால் காய்கிறேன்
தொடும் தூரம் நீ இருந்தாலும்
தொடாமல் நிலவாய் தேய்கிறேன்

Tuesday, October 28, 2014

மழையில் நனைந்த சிறு புறாவாய்

பல்லவி

மழையில் நனைந்த சிறு புறாவாய்
மனசில் அன்று பரபரப்பு
காலை நேர இளம் வெயிலாய்
எனக்குள் இன்று கதகதப்பு

நீயிருக்கிறாய் என்
நினைவுகளின் ஓரமடி
கண் தூக்கம் மறந்து
கடந்தன பல வாரமடி



சரணம் 1

உன்னோடு இருக்கும் நிமிடங்கள்
சுவர்க்க வாசனை தருகிறது
நீ மறைந்தால் கண்ணைவிட்டு
இதயம் இரண்டாய் உடைகிறது

ரகசியக் கனவுகளில் எல்லாம்
உன்னை வைத்து பூட்டுகிறேன்
நீயே எந்தன் சுவாசம் என
எல்லோரிடமும் காட்டுகிறேன்



சரணம் 2

பெண் நிலவே நீதான்
எந்தன் வாழ்வின் ஆதாரமாய்
நீயற்ற கணம் எல்லாமே
ஆகுது இங்கே சேதாரமாய்

அன்பு நிறைந்த இதயக் குளத்தில்
பூத்தாயே வெண் தாமரையாய்
நட்சத்திர வானத்திலே நீ
ஒளி வீசும் பிறை நிலவாய்

இதயம் இப்படி வலிக்கவில்லை

பல்லவி

இதயம் இப்படி வலிக்கவில்லை
இதுவரை எதையும் ஒழிக்கவில்லை
உன்னைக் கண்ட முதல்நாள் தொடக்கம்
தனிமையை தனியாய் கழிக்கவில்லை

உறக்கம் முன்போல் இனிக்கவில்லை
உண்ணவும் பருகவும் பிடிக்கவில்லை
உன்னைக் கண்ட முதல்நாள் தொடக்கம்
உயிரும் மனசும் எனக்கு இல்லை!



சரணம் 1

கனவும் தெரியல நிஜமும் தெரியல
காலையும் மாலையும் உன் நினைப்பு
இரவும் தெரியல பகலும் தெரியல
இருதய இயக்கத்தில் இரு துடிப்பு

உந்தன் ஞாபகத் தீயில் நானும்
சுகமாய் இங்கே குளிர் காய்வேன்
களங்கமற்ற உன் சிரிப்பொலியால்
சுவாசிக்கும்போது சுகம் பெறுவேன்

உன் கண் அசைவில் ஒரு மின்மினி
உயிரோவியமாய் எனக்குள்ளே நீ


சரணம் 2

ஒரு திசை பார்த்து தனித்திருந்தேனே
ஓரப் பார்வையில் எனை மறித்தாய்
உன் விழி அசைவில் நான் தொலைந்தேனே
எந்தன் உயிரில் பூ பறித்தாய்

நீ வரும் அந்த ஒற்றை நொடியில்
மனதில் தோன்றும் புது வசந்தம்
என்னைப் பார்த்து நீ சிரிப்புதிர்த்தால்
இதயத்தில் வீசும் புது சுகந்தம்

பொழுதெல்லாம் உன்னால் பூஞ்சோலை
சுகமாப் புலரும் இனி அதிகாலை

Sunday, October 26, 2014

ஓராயிரம் பூக்கள்

பல்லவி

ஓராயிரம் பூக்கள்
ஒன்றாக மலரும் மலரும்
ஒவ்வொரு இரவும்
காலையில் புலரும் புலரும்



சரணம் 1

பெண்

என் மனவெளியில் ஆனந்தமில்லை
என் இதயத்தில் பேரின்பமில்லை
உன் கண்களில் காதல்களில்லை
உன் நெஞ்சில் ஈரங்களில்லை

ஆண்

செல்லக்கிளியே என்னை மாற்றிடு
உள்ளம் தெளிய தலை கோதிடு
எனை எனக்கு பறைசாற்றிடு
வீணையாக்கி தினம் மீட்டிடு



சரணம் 2

ஆண்

தீயவற்றை நான்; தாண்டினேன்
திருந்திய பின் உனை பார்க்கிறேன்
அன்புக் கணவனாய் நான் மாறுவேன்
அன்பே உனக்கு சேய் ஆகுவேன்

பெண்

நெஞ்சில் பொங்கும் ஆனந்தமே
இனி எனக்கு பேரின்பமே
நீயே எந்தன் ஆகாயமே
நீங்கும் எந்தன் துயர் யாவுமே!

வாழ வைப்பது எங்களை

பல்லவி

வாழ வைப்பது எங்களை
என்ன என்று சொல்லுங்க
தெரியலன்னா கொஞ்சம் ஒதுங்கி
அங்கே போயி நில்லுங்க



சரணம் 1

பால் வாசம் மாறாத பச்சக் கொழந்த
பண வாசம் உணர்ந்துகிட்டு எழும்பிடுதுங்க..
பாடம் படிக்க போகின்ற சின்னதுங்களும்
பணத்த கேட்டு அடம் புடிச்சி அழுவுதுங்க..

எங்கே போயி பணம் எடுப்பேன்
எப்படி நான் பணம் கொடுப்பேன்?



சரணம் 2

ஊருக்காரன் உறவுக்காரன் ஒன்னா வருவான்
ஊட்டுக்குள்ளே படுத்துகிடந்து உசுர எடுப்பான்
மாற்றுக்காசு வாங்றதுக்கே வழியில்லாதப்ப
வேறு தேவை பலதை சொல்லி கரச்சல் கொடுப்பான்

எங்கே போயி பணம் எடுப்பேன்
எப்படி நான் பணம் கொடுப்பேன்?

சங்கிலியாய் என்னுள்ளே

பல்லவி

சங்கிலியாய் என்னுள்ளே
நீளுகின்ற நினைவு
சந்தோஷம் யாவையும்
நீக்கிவிடும் நிகழ்வு

தொடர்ந்திடும் சோதனைகள்
சோர்வினைக் கூட்டும்
உள்ளத்தின் வலிமைகள்
உடைந்தென்னை வாட்டும்


சரணம் 1

வெறுங் கண்ணீர் வடிக்காது
வேதனையுடன் நானிருந்தேன்
வெடித்து மனம் வலித்தபோது
அழுது நான் துடித்திருந்தேன்

மாருதத்தின் சுகந்தத்தில்
மயங்கிடத்தான் காத்திருந்தேன்
சூறாவளி வருமென்று
கனவிலா பார்த்திருந்தேன்?


சரணம் 2

அடுத்து வரும் நாட்களிலே
இந்த துன்பங்கள் நீங்கிடுமா?
எப்போதும் எனை மட்டும்
வதைத்ததிங்கே வாட்டிடுமா?

மொட்டவிழும் மகிழ்வெல்லாம்
உடனடியாய் கருகிடுமா?
என் நெஞ்சம் கரைந்திங்கு
கண்ணீரும் பெருகிடுமா?

உயிருக்குள் நீ பாதி

பல்லவி

உயிருக்குள் நீ பாதி
உணர்வினிலே நீ மீதி

மாஞ்சோலை மனசுக்குள்
மழை போல விழுந்தவளே..
சொல்லாக இருந்தென்னுள்
கவிதையாய் எழுந்தவளே..


சரணம் 1

ஆண்  

  கதை பேசும் கரு விழிக்குள்
சுகமாக உறங்கிடவா?
ரோஜாப் பூ உதட்டுக்கு
மெதுமெதுவாய் இறங்கிடவா?

பெண்  

  என் அருகே வரும் உன்னை
மிக மெதுவாய் தள்ளிடவா?
பின் இருந்து எனை அணைக்கும்
உனை நானும் கிள்ளிடவா?



சரணம் 2

ஆண்

  பால் கோப்பை மனசுக்குள்
பழத் துண்டாய் விழுந்தாயே..
நெஞ்சென்ற வயலுக்குள்
நெற் கதிராய் முளைத்தாயே!

பெண்  

  நந்தவனச் சோலைக்குள்
நறுமலராய் பூத்தாயே..
நான் உந்தன் சேய் போல
நாளெல்லாம் காத்தாயே!

Friday, October 24, 2014

கிளை விரித்த உன் நெஞ்சில்

பல்லவி

கிளை விரித்த உன் நெஞ்சில்
கிளி போல நானிருப்பேன்

மலைத் தேனைப் போல் உந்தன்
மனசுக்குள் இனித்திடுவேன்


சரணம் 1

ஒத்தை பன மரம்போல
ஒதுங்கியே நான் நிக்கையிலே
வித்தை போல நெஞ்சுக்குள்
விருப்பமாக நுழைந்தாயே

 உச்சி முதல் பாதம் வரை
உன் நெனப்பில் மிதக்கையிலே
 நச்சி வச்ச இஞ்சியப் போல்
 நறுமணத்தை தந்தாயே


சரணம் 2

உன் விழிக்குள் மீன் போல
உலவிய படி இருப்பேனே
கண் விழிக்கும் நேரத்திலும்
கவிதைகள் படிப்பேனே

நீ தின்ற கரும்பையும்
நிஜமாகவே ருசிப்பேனே
ஏன் இந்த அவஸ்தை என
எனை எண்ணியே சிரிப்பேனே!

அன்பை அள்ளிப் பொழியும்

பல்லவி

அன்பை அள்ளிப் பொழியும்
இதயம் நிறைந்த அல்லாஹ்வே
நீ வகுத்த வழிவகையில்
வாழ்வேனே என் வாழ்வை!

சரணம் 1

காடு மலை நதிகளை
கண்குளிர்ச்சியாய் தந்தாயே
சுகந்தரும் தென்றலை
சுவாசிக்க வைத்தாயே...

வெண் பகலை இரவுக்குள்
வேறாக்கி வைத்தாயே
நீரினிலும் நிலத்தினிலும்
உயிர்களைப் படைத்தாயே

சரணம் 2

சமூகங்கள் திருந்திவிட
நபிகளாரைத் தந்தாயே..
தூய நபி நாயகத்தின்
உம்மத்தாயெமை வைத்தாயே

மறுமையில் எமக்காக
சுவனத்தைத் தருவாயே..
சுவனத்தை அடைவதற்கு
நற்குணங்கள் தருவாயே!

வாலிபத் தென்றலாய் வந்து

பல்லவி

வாலிபத் தென்றலாய் வந்து
வசியம் செய்தவனே..
மனதை பறித்துப்போட்டு
மகிழ்ச்சி தந்தவனே..

உணர்வுகளில் புகுந்து
உறக்கம் தின்றவளே..
முத்தங்கள் தந்து என்
மூச்சைக் கொன்றவளே..


சரணம் 1

என் மன ஓசையை
மொழிபெயர்த்துப் பார்த்தாயா?
கண்களின் பாசையை
கவிதைகளில் சேர்த்தாயா?

தனியான நேரத்தில்
எனை எண்ணிப் பார்த்தாயா?
கனவில் நான் வந்ததால்
உடலெல்லாம் வேர்த்தாயா?


சரணம் 2

உயிருக்குள் உறவாடி
உள்ளத்தை கொய்தவனே..
மாந்தோப்பின் தூறலாய்
மனசெல்லாம் பெய்தவனே..

காதலின் அழகெல்லாம்
கலர்கலராய் தந்தவளே
புன்னகையின்; மொழியினை
பூக்களுக்கே சொன்னவளே..