Sunday, April 24, 2016

‪‎பனிச் சாரல் மனதில் தெறிக்குது

பல்லவி

ஆண்‬ -
பனிச் சாரல் மனதில் தெறிக்குது
பெண்ணே உன்னாலே..
அகிம்சையாய் யுத்தம் செய்கிறாய்
கண்ணே கண்ணாலே

‪‎பெண்‬ -
கனி கன்னங்கள் சிவப்பாய் மாறுது
கண்ணா தன்னாலே..!
ஓ. ..மனசோடுது என்னை மீறி
உந்தன் பின்னாலே!

சரணம் 1

பெண் - 
கண்ணே உன் எண்ணங்கள்
நெஞ்சில் அலைமோதும்
ஓயாமல் என் மனம்
தினமும் உனைத் தேடும்

ஆண் - 
நீ வாங்கும் மூச்சிலே
என் ஜீவன் கலந்தோடும்
நீ பார்க்கும் பார்வையில்
காதல் வழிந்தோடும்


சரணம் 2

ஆண் -
வளைந்தோடும் நதிகளின்
அழகும் நீ தானே..
அசைந்தாடும் பூவிலே
உந்தன் முகம் தானே

பெண் -
விழி சிந்தும் ஒளியிலும்
இருப்பது நீ தானே...
இதழோரச் சிரிப்பிலே
இன்பமும் நீ தானே...!

Friday, April 1, 2016

நபி பெருமானாரின்


பல்லவி

நபி பெருமானாரின்
புகழினைப் பாட
வார்த்தைகள் ஏது
எல்லை கிடையாது

கருணையின் வடிவாய்
வையகம் சிறந்திட
இறையோன் தந்தானே
தூயவர் நபியை
நபி பெருமானின்

சரணம் 1

மடமைகள் கொளுத்தி
மலர்ச்சியை தந்தார் (2)
கடமைகள் மதித் - திடும்
மனிதராய் திகழ்ந்தார்

தொழுகையைப் பேணியே
தொழுகவென்று சொன்னார்
அழுகை  துஆவின்
ஆழம் என்று சொன்னார்
நபி பெருமானின்


சரணம் 2

ஏழைகளை மதித்தே
ஏற்க வேண்டும் என்றார் (2)
இறையோனை போற்றும் - வழி
வகையை சொன்னார்
                     
கனிவான மார்க்கமதை
கடைப்பிடிக்கச் செய்தார்
பணிவாக நடந்து
பார்புகழ வாழ்ந்தார்

வானம் விடிஞ்சிருச்சு

பல்லவி

வானம் விடிஞ்சிருச்சு
வாழ்க்க விடியலயே
தூரம் முடிஞ்சிருச்சி
துன்பம் முடியலயே

மரணத்தின் வாசலோ
மனக் கண்ணில் தோன்றுதே
வாழும் வழி தெரியாம
நாட்களும்தான் நீளுதே

சரணம் 1

யதார்த்தம் என்றொரு
மரண நிலை உள்ளதே
இதயச் சுமை அதிகரித்து
தினம் தினம் கொல்லுதே

தலைவிதி என்றொரு
வியப்புக்குறி உள்ளதே
விதி விலக்கு எதுவுமின்றி
உயிர் வலிக்க செய்யுதே


சரணம் 2

ராகங்கள் சுரம் மாறி
முகாரியாய் ஆகுதே
மேகங்கள் தீப்பிடித்து
சாம்பலாகிப் போகுதே

சோகங்கள் துரத்தியே
சோர்வினை காட்டுதே
வேகங்கள் குறைந்துயெம்
வேதனையை கூட்டுதே

என் வாழ்வின் வசந்தங்களே

பல்லவி

என் வாழ்வின் வசந்தங்களே
உன் உயிரே நீர் தானே
சிறப்பாக வளர்த்தெடுத்த
சிறு பயிரும் நான் தானே

கடல் போல நீர் இருந்தீர்
மழைத் துளியாய் நான் மலர்ந்தேன்
உடலுக்குள் கருவானேன்
உம்மாலே உருவானேன்

சரணம் 1

காற்று தந்த சுவாசத்தை
கற்றுத் தந்ததே கருவறை
போற்றுவேன் என் அன்னையே
ஆழமாய் என் உயிர் வரை

பசியோடு நான் காத்திருந்தால்
பாசமாக இலை விரிப்பீர்
ருசியென்று நான் மொழிந்தால்
மெதுவாக இதழ் சிரிப்பீர்



சரணம் 2

மகிழ்ச்சியாய் என் முகமிருந்தால்
மலந்திடும் உங்கள் பூ முகம்
துயரமாய் என் அகமிருந்தால்
துடித்திடும் என் தந்தை மனம்

கால் தடுக்கி நான் விழுந்தால்
கண்ணிலே வருமே நீர்த் துளி
காய்ச்சலாலே நான் படுத்தால்
கலங்கிடும்  உங்கள் இரு விழி

பூமான் நபி உலகை

       
பல்லவி

பூமான் நபி உலகை
புனிதமாக்க வந்தார்
ஈமான் நிலைத்திட
இஸ்லாத்தை தந்தார்

பாவம் யாவும் நீக்கி
பாரில் அமைதி காத்தார்
ஏகனாம் அல்லாஹ்வின்
ஏந்தல் நபியானார்


சரணம் 1

கதீஜாவை மணந்து
முன்மாதிரி ஆனார்; (2)
கைம்பெண்ணும் வாழ - ஒரு
நல் வழியை தந்தார்

ஜாலங்கள் புரிந்து வந்த
ஜாஹிலிய்யா கால
மனிதரை புனிதராக்கி
மனித நேயம் காத்தார்


சரணம் 2

சஹாபாக்கள் தனது
சந்நிதானம் நாடி (2)
மார்க்க உபதேசம் - கேட்டு
வாழ வழி செய்தார்

அபூபக்ர் உஸ்மானும்
உமரும் அலியும்
நல்லாட்சி செய்யவே
நபிகள் வழிகாட்டினார்

பால்நிலா பொழியும் நேரம்

ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
தூறல் போடுதே.. இன்றென்னில்
சுகம் கூடுதே..!

பெண்:-
ரகசியக் கனவுகளில்
ராகங்களை இசைக்கின்றாய்..
நீயே.. எனைக் கொல்கிறாய்!

நெஞ்சுக்குள் வருடுகிறாய்
நேசமாய் நெருடுகிறாய்
நீயே.. எனைத் தின்கிறாய்!

முழுவதாய் எனக்குள்ளே உதிரம் போல் நுழைந்தாயே
இனிமைதரும் மொழியாக இதயத்தில் கலந்தாயே

பார்த்தாய்.. தடம் மாறினேன்..
ஈ(ர்ர்)த்தாய்.. தடுமாறினேன்..

ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
தூறல் போடுதே.. இன்றென்னில்
சுகம் கூடுதே..!

பெண்:-
உணர்வில் எல்லாம் தேன்துளி சிந்த
நெஞ்சில் விழுந்தாய்...
என் அணுவெங்கும் பூவின் வாசனை!

புயலாய் இருந்த எந்தன் மனமின்று
பூவின் இதழாய்..
இனி எனக்குள்ளே உன் நினைவு மோதி; செல்லுமே!

ஆண்:-
ஒரு மணிப்புறா போல நீ மயக்குற என்ன
உன் புன்(ன்ன்)னகை போதும்
நான் தொலஞ்சதும் கரஞ்சதும் உண்மயடி

பெண்:-
இதயத்தின் சிறைக்குள்ளே கைதிபோல் வந்தாயே
இனிமைகள் கலந்து நீ இம்சைகள் தந்தாயே

ஆண்:-
தூக்கத்திலும் ஏக்கத்திலும் நீயேதான் இருக்கிறாய்
தீ போல பனி போல மாறுகிறாய்!
அலைபோல கரை என்னில் சேருகிறாய்!

பெண்:-
குளிர்தரும் தென்றலாய் எனக்குள்ளே வந்தாயே
அருவிபோல் உள்ளுக்குள் சலசலன்னு நின்றாயே

பார்த்தாய்.. தடம் மாறினேன்..
ஈ(ர்ர்)த்தாய்.. தடுமாறினேன்..

ஆண்:-
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்
பால்நிலா பொழியும் நேரம்
பூமழைக் காதலின் ஈரம்