Tuesday, November 1, 2016

தனக்கென மட்டும் வாழ்கின்ற மனிதனில்

பல்லவி

தனக்கென மட்டும் வாழ்கின்ற மனிதனில்
பாசம், காதல் இருக்காதே
உனக்கும் புதிதாய் எதிரிகள் முளைத்தால்
சிகரம் தொடுவாய் மறக்காதே

சரணம் 1

கண்களில் விழுந்திடும் தூசியைக் கண்டு
அழுதல் என்பது ஞாயமில்லை
சூரியன் தலையின் உன் பேரெழுதிடு
உனக்கந்தச் சூரியன் தத்துப்பிள்ளை

தோல்விகள் கண்டு துவண்டிருப்பதற்கு
உனக்கென்று பிறிதொரு நேரமில்லை
நெஞ்சுக்குள் ஆழமாய் நம்பிக்கை விதைப்பாய்
வெற்றிகள் உனக்கு தூரமில்லை

சரணம் 2

கேலிகள் செய்வார் கோள்களைச் சொல்வார்
எதையும் எண்ணி நீ வருந்தாதே
பலமுறை சொல்லியும் திருந்தா கூட்டம்
இனி ஒருபொழுதும் திருந்தாதே

பாறைக்குள் இருக்கும் செடிகள் எல்லாம்
முட்டி முளைத்திடும் துணிவோடு
வாழப் பயந்து நீ இருக்காமல்
வாழப் பழகிட துணிந்தோடு

No comments:

Post a Comment