Sunday, January 17, 2016

சின்ன நிலவே சின்ன நிலவே

பல்லவி

சின்ன நிலவே சின்ன நிலவே
எந்தன் உயிரில் பூத்த மலரே
என்னை பார்த்து நீயும் சிரித்தாய்
எந்தன் உயிரில் பூக்கள் பறித்தாய்

நீதானே இன்று பிறந்தாய்
உன் சின்ன கண்கள் திறந்தாய்
மழைத்துளி போல் மனது
சிலிர்க்குதே இப்பொழுது
என்னுடனே நீயிருந்தால்
தினம் என்னுடனே நீயிருந்தால்

சரணம் 1

உன்னைக் காணும் வரை வாழ்வே இல்லை என்ற
ஏக்கத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்துக்கொண்டு சோகம் தீர்த்துக்கெண்டு
புதிதாக நான் பிறந்தேன்

தீயாய் நோக்குகின்ற தீயோர் பார்வைக்கெல்லாம்
முத்தாக நீ கிடைத்தாய்
பிள்ளைச் செல்வம் என்ற சொல்லின் அர்த்தத்துக்கு
சொத்தாக நீ கிடைத்தாய்

மண்ணில் இன்று நானே தலை நிமிர்ந்து போக
காரணம் நீயல்லவா
கண்ணில் தோன்றும் எந்தன் சந்தோசங்களுக்கு
தோரணம் நீயல்லவா

துன்பங்கள் தீருமே இன்பங்கள் கூடுமே
என்னுடனே நீயிருந்தால் தினம்
என்னுடனே நீயிருந்தால்

சரணம் 2

பூவைப் போன்ற உன்னை சேயாய் பெற்றதற்கு
என்ன தவம் நான் புரிந்தேன்
உன் பிஞ்சு பாதம் நெஞ்சில் வந்து மோதும் போது
சுவர்க்கத்தை நான் அறிந்தேன்

உன் பார்வை ஓர் நிமிடம் பாவை என் மனதில்
பால் வார்க்கம் சுகம் உணர்ந்தேன்
பெண்ணாய் மண்ணின் மீது நானும் பிறந்ததற்கு
அர்த்தம் நீ என்றறிந்தேன்

சின்னக் கைகள் ஆட்டி நீ சிரிப்புதிர்க்கும் வேளை
மொத்தமாக நான் தொலைந்தேன்
வண்ண கன்னம் பார்த்து முத்தமிட்டுக்கொண்டே
என் நாட்கள் நான் தொடர்வேன்

துன்பங்கள் தீருமே இன்பங்கள் கூடுமே
என்னுடனே நீயிருந்தால் தினம்
என்னுடனே நீயிருந்தால்

No comments:

Post a Comment